வேள்பாரி: “விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான்; இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை’’- ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வனின் ஓவியங்களில் வெளியாகி, மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி.’

இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இதைக் கொண்டாடும்விதமாக இந்தப் புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தைத் திறந்துவைத்து நடிகர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான அடையாளம் ஆனந்த விகடன்!

அப்போது, “தமிழ்நாட்டின் மிக முக்கியமான அடையாளம் ஆனந்த விகடன் என்று சொன்னால் அது மிகையாகாது. நூறு ஆண்டுகள் இந்தப் பத்திரிகை அதே வீரியத்துடன் இயங்குகிறது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும், அது மக்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், விகடன் குழுவினரின் உழைப்பு.

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா - ரஜினிகாந்த்
வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா – ரஜினிகாந்த்

எங்களின் நட்பில் எந்த விரிசலும் இல்லை!

நானும், விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனும் அடிக்கடி சந்திப்போம். எனக்கும் அவருக்கும் எப்போதும் ஒத்துப்போனதில்லை. ஆனாலும், நாங்கள் சிரிப்புடன் விடைபெறுவோம். சில நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். நான் செல்ல மாட்டேன். அதனாலும் எங்கள் நட்புக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. பிறகு ஜூனியர் விகடன், ஆனந்த விகடனில் என்னைக் கிழி கிழி எனக் கிழிப்பார்கள். அதில் அதிகம் கிழித்தது என்னைத்தான். இருந்தாலும், எங்களின் நட்பில் எந்த விரிசலும் இல்லை.

விகடனின் நிர்வாக இயக்குநர் வெளிநாட்டில் படித்தவர். அவர் நினைத்திருந்தால் வேறு பல தொழில்கள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். ஆனாலும், இந்தத் துறையிலிருந்து எத்தனை எழுத்தாளர்களைக் கொடுத்திருக்கிறார்… `வேள்பாரி’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆனந்த விகடன்.

வக்கீலும் அவர், நீதிபதியும் அவர்தான்!

`நீயா நானா?’ கோபிநாத்தைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். `பாட்டும் நானே… பாவமும் நானே…’ என்பதைப்போல வக்கீலும் அவர், நீதிபதியும் அவர்தான்.

உதயச்சந்திரன் அவர்கள் பெரும் பேராசியராக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இங்கு அமர்ந்திருக்கிறார் என்றால், `வேள்பாரி’ அவரை இழுத்து வந்திருக்கிறது.

70, 80-களில் இருந்த சினிமாவை மாற்றியவர்கள் பட்டியலில் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் இருப்பார்கள். `வேள்பாரி’ படமாகப் போகிறது என்பதை அறிந்து எல்லோரைப்போலவும் நானும் காத்திருக்கிறேன்.

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா - ரஜினிகாந்த்
வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா – ரஜினிகாந்த்

சு.வெங்கடேசன் என்னை அழைத்து ` `வேள்பாரி’ ஒரு லட்சம் பிரதி விற்றிருக்கிறது. அதற்கு விழா நடத்துகிறார்கள். அதற்கு நீங்கள் வந்தால் மகிழ்ச்சி. உங்களின் பிஸியான நேரத்தில் உங்களைச் சிரமப்படுத்த விரும்பவில்லை. உங்கள் விருப்பம்’ என்றார். `நான் வேள்பாரி படித்ததில்லையே…’ என்றேன். நான் ஒருவரை அனுப்புகிறேன். அவர் உங்களுக்குக் கதை சொல்வார் என்றார். நான் `அதெல்லாம் வேண்டாம்’ என்று வருவதாக ஒப்புக்கொண்டேன்” என்றார்.

வேள்பாரி Audio Formatல் கேட்க :

https://play.vikatan.com/Velpari-audio-book

வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை `க்ளிக்’ செய்யவும்!

https://tinyurl.com/Velpari-Books

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.