புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேசிய சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்று பேசியதாவது: வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தாமல் கல்வி உதவித்தொகை மூலம் படிக்க வேண்டும். நமது சட்ட அமைப்பு சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று என்று நான் கருதினாலும் எனது சக குடிமக்கள் இந்த சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
விசாரணைகளில் ஏற்படும் தாமதம் சில நேரங்களில் பல ஆண்டுகள் நீடிக்கிறது. விசாரணைக் கைதியாக பல ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு ஒருவர் நிரபராதி எனக் கண்டறியப்பட்ட வழக்குகளை நாம் கண்டிருக்கிறோம். நீதித்துறையில் குறைகளை களைவது அவசியம். நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க நமது அசாத்திய திறமை நமக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.