Saroja Devi: 'வேதனை அடைந்தேன்; அவரின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாதது'- ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேஷனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார். 

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர்  உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சரோஜா தேவி
சரோஜா தேவி

அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சரோஜா தேவி மறைவிற்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திருமதி சரோஜாதேவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் திருமதி சரோஜாதேவி அவர்கள்.

தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா. உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ். தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் திருமதி சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாதது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.