சென்னை: “திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்பேன்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் என்னை சந்திக்க விரும்பினால் சந்திப்பதில் தயக்கமில்லை. பாஜகவில் ஏராளமானவர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். நட்பு வேறு, கொள்கை வேறு. அவர்களுக்கு அவர்களது கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல விசிகவின் கோட்பாடுகள் எனக்கு முக்கியம். இதைத் தாண்டி நட்பு இருப்பதில் தவறில்லை.
அதனடிப்படையில் கே.பி.ராமலிங்கம் நன்கு அறிமுகமானவர். அவர் திமுக எம்.பி.யாக இருந்த காலத்தில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சந்தித்திருக்கிறோம். அந்த நட்பின் அடிப்படையில் சந்திப்பதாக இருந்தால் நிச்சயமாக வரவேற்போம். ஆனால், பாஜக கொள்கை என்பது அம்பேத்கரின் கொள்கைக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
திமுகவுடன் இருப்பதால் பாஜகவை எதிர்ப்பதாக கருதுகின்றனர். அப்படியல்ல. திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களால் பாஜக கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. தனியாக இருந்தாலும் பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்போம். அதற்கு பாஜக மீது தனிப்பட்ட தேர்தல் அரசியல் காரணமல்ல. அம்பேத்கரின் உயிர்மூச்சு கோட்பாடாக இருக்கும் மதச்சார்பின்மைக்கு நேர் எதிராக இருப்பதால் பாஜகவை எதிர்க்கிறோம்.
அவர்கள் கூட்டணிக்கு அழைத்ததும் சென்றிருந்தால் என்னை புகழ்ந்திருப்பார்கள். அவ்வாறு செய்யவில்லை. இதனால் என்னை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசிகின்றனர். இது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். அதிமுகவை நான் விமர்சிக்கவில்லை. அவர்கள் மீது எந்த காழ்ப்பும் இல்லை. தன்னை பலவீனமாக கருதுபவர்களை பாதுகாத்து, பலவீனமாகிவிடக் கூடாது என கவலையடையும் என்னை விமர்சிப்பதும் அதிமுகவின் அணுகுமுறையாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சியை பாஜக துச்சமாக மதிக்கிறது. பாஜகவுக்கு எதிராக அல்லவா கோபம் வர வேண்டும். அதை சுட்டிக்காட்டும் என்னை விமர்சிக்கும் அதிமுக தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
விசிக மீது சந்தேகத்தை உருவாக்கினால் திமுக கூட்டணியில் குழப்பம் உருவாகி, விரிசல் ஏற்படும் என்பதே பாஜகவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த கட்சி வளரவே கூடாது என நினைப்பவர்கள் கூட ஏன் 6 சீட் வாங்குகிறீர்கள் என திடீர் கரிசனத்தில் கேட்பதற்கு, எங்கள் நலன் மீதான அக்கறை காரணமல்ல. எங்கள் உணர்ச்சியை தூண்டி திமுக மீது வெறுப்பு வர வைக்க முயற்சிக்கின்றனர்.
பாஜக என்னும் மதவாத சக்தியை எதிர்கொள்ள திமுக மட்டுமே பாதுகாப்பு அரண் என நான் சொல்லவில்லை. விசிகவும் சேர்ந்து உருவாக்கிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் பாதுகாப்பு அரண் என சொல்கிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.