18 நாட்களுக்கு பின்பு மனைவி, மகனை சந்தித்தபோது… சுபான்ஷு சுக்லாவின் நெகிழ்ச்சியான தருணங்கள்

நியூயார்க்,

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர்.

விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன் பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும். இந்தநிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் கடந்த 14-ந்தேதி 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு 15-ந்தேதி மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி பிற்பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளி படைதளத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் மறுவாழ்வை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் சுபான்ஷு சுக்லா, அவருடைய மனைவி காம்னா சுக்லா, மகன் கியாஷ் சுக்லா (வயது 6) ஆகியோரை இன்று நேரில் சந்தித்து ஆரத்தழுவி கொண்டார். அவர்கள் இருவரும் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு முன்பே வந்து விட்டனர். இந்த 2 மாதங்களில் குடும்பத்தினரை சுக்லா சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், விண்வெளி பயணம் சவாலாக இருந்தது. பூமிக்கு திரும்பி வந்து, என்னுடைய குடும்பத்தினரை கட்டியணைப்பது என்பது வீட்டில் இருப்பது போன்று உணர்கிறேன். மனித விண்வெளி திட்டங்கள் மாயம் நிறைந்தவை. ஆனால் அவை, மனிதர்களாலேயே மாயம் நிறைந்த ஒன்றாக உருவாக்கப்படுகின்றன என பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவை 1.29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதுபற்றி காம்னா கூறும்போது, சுபான்ஷு சுக்லா பாதுகாப்பாக திரும்பியிருக்கிறார். நம்முடைய உடனடி கவனம், அவருடைய மறுவாழ்வு பற்றியும் மற்றும் பூமியில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு அவர் திரும்பி விட்டார் என உறுதி செய்வதிலும் இருக்கும் என்றார்.

விண்வெளியில் அவர் இருந்தபோது தவற விட்ட, அவருக்கு பிடித்த, சுவையான சில உணவு பண்டங்களை தயாரித்து வைத்திருக்கிறேன் என்றும் காம்னா கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் 3-ம் வகுப்பு படிக்கும்போது, ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். 2009-ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்தது. 2027-ம் ஆண்டு ககன்யான் என்ற இஸ்ரோவின் முதல் மனித விண்கல திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சுக்லாவின் பங்கும் இருக்கும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.