லக்னோ: சட்டவிரோத மதமாற்றத்தில் நடைபெறும் நிதி முறைகேடு தொடர்பாக உத்தர பிரதேசம், மும்பையில் 14 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. உத்தர பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரிமுல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்கூர் பாபா என அழைக்கப்படுகிறார்.
இவரது தலைமையிலான குழுவினர் பல்ராம்பூரில் உள்ள சந்த் அவுலியா தர்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் மிகப் பெரிய கூட்டங்களை அடிக்கடி கூட்டி சட்டவிரோத மதமாற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த கூட்டத்தில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பங்கேற்கின்றனர்.
இந்தப் பணிகளுக்காக சங்கூர் பாபாவுக்கு, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான அளவில் நன்கொடை வருகிறது. ஜலாலுதீன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் பெயரில் உள்ள 40 வங்கி கணக்குகளில் ரூ.106 கோடி பணம் உள்ளது.
இந்த கும்பல் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதால், ஜலாலுதீன், அவரது மகன் மெகபூப், கூட்டாளிகள் நவீன் என்ற ஜமாலுதீன், நீத்து என்ற நஷ்ரீன் ஆகியோரை உ.பி. தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் உ.பி.யில் 12, மும்பையில் 2 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனை நடத்தினர். இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.