கல்லீரல் பாதிக்கப்பட்ட 2 நோயாளிகளின் மனைவிகளிடம் இருந்து தானம் பெற்ற கல்லீரல்களை பரஸ்பரம் மாற்றி பொருத்தி சிகிச்சை

சென்னை: கோவை ஜெம் மருத்துவமனை மற்றும்  ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு முதல்முறையாக, அவர்களின் மனைவிகளிடம் இருந்து கல்லீரல்கள் தானமாகப் பெறப்பட்டு பரஸ்பரம் முறையில் மாற்றி (ஸ்வாப்) பொருத்தப்பட்டது.

இது தொடர்பாக ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு, ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நாள்பட்ட கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோசிஸ்) ஆளாகியிருந்தார்.

அதேபோல், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த 53 வயது நபர் ஒருவரும் கல்லீரல்செயலிழப்புக்கு உள்ளாகி, ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்கள் இருவருக்கும் உறுப்பு மாற்று சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வாக இருந்தது.

அவர்களது மனைவிகள் தங்களது கணவர்களுக்கு கல்லீரலை தானமாக அளிக்க முன்வந்தாலும், அவை அந்நோயாளி களுக்கு பொருந்தாத நிலையில் இருந்தன. அதேநேரம், அந்த பெண்களின் கல்லீரல்களானது பரஸ்பரம் நோயாளிகளுக்கு மாற்றி பொருத்துவதற்கு தகுதியாக இருந்தன.

வழக்கமாக ஒரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டி ருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த பரிமாற்ற சிகிச்சைகளை அளிக்க விதிகளில் இடம் உள்ளது. ஆனால் இரு வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு இதற்கு முன்பு அத்தகைய நடைமுறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில்லை. இதனால், மாநில அரசின் உறுப்பு தான ஒப்புதல் குழு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான மனுத்தாக்கல் செய்து அனுமதி பெறப்பட்டது. அதன் பின்னரே 2 நோயாளிகளுக்கும் தனித்தனியே கல்லீரல் மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர்.

இந்த சிகிச்சை அனைத்தும் முதலமைச்சரின் விரிவானமருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமின்றி செய்யப்பட்டது. உறுப்பு தானம் அளிப்பதில் முன்னெடுக்கப்பட்டிருக் கும் இந்த புதிய நடைமுறை எளிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.