India Champions vs Pakistan Champions: World Championship of Legends தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ், மேற்கு இந்திய தீவுகள் சாம்பியன்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளின் ஓய்வுபெற்ற நட்சத்திர மூத்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
WCL 2025: 15 லீக் போட்டிகள், 3 நாக்அவுட்கள்
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 15 லீக் ஆட்டங்களுக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். ஆக. 2ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ், பர்மிங்காம், நார்தாம்ப்டன், லெய்செஸ்டர் நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளன.
WCL 2025: இந்தியா சாம்பியன்ஸ் vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ்
அந்த வகையில், இந்தியா சாம்பியன்ஸ் அணி அதன் முதல் போட்டியை இன்று (ஜூலை 20) விளையாடுகிறது. யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி – முகமது ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே எதிர்பார்ப்பது இருப்பது வழக்கம்தானே என்றாலும் பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் என இரு நாட்டுக்கும் இடையே பெரும் போர் பதற்றம் நிலவியதற்கு பின்னர் நடக்கும் முதல் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பதால் பெரும் பரபரப்பும் நிலவி வருகிறது.
WCL 2025: 3 வீரர்கள் புறக்கணிக்க முடிவு
மேலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியை விளையாடாமால் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுத் தொடங்கின. இந்நிலையில், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன் சிங், யூசுப் பதான், இர்பான் பதான் ஆகியோர் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி ஹர்பஜன் சிங், யூசுப் பதான் ஆகியோர் ஒட்டுமொத்தமாகவே இந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
WCL 2025: 3 பேரும் புறக்கணிக்க என்ன காரணம்?
ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராகவும், யூசுப் பதான் மேற்கு வங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் உள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. யூசுப் பதானின் மூத்த சகோதரரான இர்பான் பதானும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியை புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதனால், இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி ஜூலை 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும்.
WCL 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஸ்குவாட் இதோ!
இந்திய சாம்பியன்கள்: யுவராஜ் சிங் (கேப்டன்), ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல், குர்கீரத் மான்.
பாகிஸ்தான் சாம்பியன்கள்: முகமது ஹபீஸ் (கேப்டன்), ஷோயப் மாலிக், சர்ப்ராஸ் அகமது, ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி, ஷாகித் அப்ரிடி, கம்ரான் அக்மல், அமீர் யாமின், சொஹைல் கான், சொஹைல் தன்வீர்.