வாஷிங்டன்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று அட்லாண்டாவுக்கு புறப்பட்டது. போயிங் ரக விமானமான அது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தின் இடது என்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த விமானி உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
என்ஜினில் தீப்பிடித்ததால் விமானத்தை அவசரமாக திரும்பி லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானி பத்திரமாக தரையிறக்கினார். அங்கு தயார் நிலையில் இருந்த அவசரகால குழுவினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.