மிர்புர்,
வங்காளதேசம் – பாகிஸ்தான் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மிர்புரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பகர் ஜமான் ஒருபுறம் நிலைத்து விளையாட மறுமுனையில் பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சைம் அயுப் 6 ரன்களிலும், முகமது ஹாரிஸ் 4 ரன்களிலும், சல்மான் ஆஹா 3 ரன்களிலும், ஹசன் நவாஸ் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். நிலைத்து விளையாடிய பகர் ஜமான் 44 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களில் குஷ்தில் ஷா (18 ரன்கள்) மற்றும் அப்பாஸ் அப்ரிடி (22 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். வங்காளதேசம் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியது.
19.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 110 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் பாகிஸ்தான் ரன் அவுட் உள்பட 3 விக்கெட்டுகளை வரிசையாக தாரை வார்த்தது. வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் களமிறங்க உள்ளது.