போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு 8 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் டிசிபி ஷாலினி தீட்சித் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து 10 வயதில் இந்தியாவுக்கு வந்த அப்துல் கலாம் முதலில் மும்பைக்கு வந்து இருபது ஆண்டுகளாக நேஹா என்ற பெயரில் திருநங்கை அடையாளத்தில் அங்கே தங்கியுள்ளார். அங்கு இவர், ஹிஸ்ரா சமூகத்தின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பிறகு போபாலின் புத்வாரா பகுதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்துள்ளார். உள்ளூர் முகவர்களின் உதவியுடன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை அவர் பெற்றுள்ளார்.
போலி அடையாளத்தின் கீழ் வாழ்ந்தது மட்டுமல்லாமல், போலியான இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் நேஹா பயணம் மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அடையாளத்தை மறைப்பதற்காக திருநங்கை போல நேஹா நடித்தாரா என்பது குறித்து மருத்துவ ரீதியாக பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நேஹாவாக நடித்த வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் கலாம் தற்போது கைது செய்யப்பட்டு வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேஹாவுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு ஷாலினி தெரிவித்தார்.