டாக்கா: வங்கதேச விமானப்படை விமானம் டாக்கா நகரில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7பிஜிஐ (சீன தயாரிப்பு) ரக பயிற்சி விமானம் டாக்கா நகரில் இருந்து நேற்று மதியம் 1.06 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், உட்டாரா என்ற இடத்தில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் விழுந்த அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் பைலட் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என வங்கதேச அரசு அறிவித்து உள்ளது.