இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மோடி, ஸ்டார்மெர் மகிழ்ச்சி

லண்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா – இங்கிலாந்து பொருளாதார ஒத்துழைப்பில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இருக்கும் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

ஜவுளி, தோல், காலணிகள், கடல்சார் பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், கரிம ரசாயனங்கள், பிளாஸ்டிக், வாகன பாகங்கள், கைவினைப் பொருட்கள், சேவைகள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகள் வலுவான வளர்ச்சிக்கு தயாராக உள்ளன. உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை மேலும் விரைவுபடுத்துவதை இது உறுதி செய்யும்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இந்த ஒப்பந்தம், ‘மேக் இன் இந்தியா’ தலைமையிலான வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு உத்வேகம் அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்திய நுகர்வோருக்கு போட்டி விலையில் உயர்தர பொருட்களை வழங்கும். நமது நாடுகளுக்கு இடையே அதிக செழிப்பையும், ஆழமான உறவையும் ஏற்படுத்துவதற்கான வாக்குறுதியை இது கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்துப் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், “இந்தியாவுடனான இந்த முக்கிய ஒப்பந்தம், இங்கிலாந்தில் வேலை வாய்ப்புகள், முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கானதாகும்.

நமது நாட்டில் இது ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, வணிகங்களுக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. அதோடு, உழைக்கும் மக்களுக்கு பொருளாதார நலன்களை அளிக்கிறது. இதுதான் மாற்றத்துக்கான எங்கள் செயல் திட்டம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிக முக்கிய ஒப்பந்தம் இது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.