வாஷிங்டன்,
காதலுக்கு கண் இல்லை. காதலுக்கு ஜாதி, மதம் தடையல்ல என்பார்கள். வயதும் தடையல்ல என அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஜோடி கூறுகிறது. அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியை சேர்ந்தவர் டயானா மொன்டானோ. 25 வயதான இவர் தன்னை விட 51 வயது அதிகமான அதாவது 76 வயதுடைய எட்கர் என்பவரை காதலித்து வருகிறார்.
இதுகுறித்து டயானா கூறுகையில், வயது என்பது வெறும் எண் தான். நான் எட்கரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன். இதனால் எனது குடும்ப உறுப்பினர்கள் கோபம் அடைந்தாலும் பரவாயில்லை. அவர்கள் எனது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் எல்லையில்லா இன்பத்தை எனக்கு அளிக்கிறார் என்றார்.
எட்கரின் முன்னாள் காதலி மூலமாகத் தான் டயானா அவருக்கு அறிமுகமானாராம். பின்னர் ஒரு வருடமாக அவர்கள் டேட்டிங் செய்துள்ளனர்.
அப்போது எட்கரை டயானாவுக்கு மிகவும் பிடித்து போனது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் எட்கர் தான் முதலில் தனது காதலை கூறி உள்ளார். உடனே டயானாவும் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால் டயானாவின் இந்த காதலை அவர்களது குடும்பத்தினர் கண்டித்தனர். நீ வாழ்க்கையை வீணாக்கி கொண்டிருக்கிறாய் என அவர்கள் கண்டித்தாலும் டயானா அதனை பொருட்படுத்தவில்லை. எட்கருடன் இருக்கும் உறவு உண்மையானது என கூறுகிறார். இவர்களின் காதல் பற்றிய தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், இது இயற்கைக்கு மாறானது என பதிவிட்டனர்.
இருப்பினும், காதல் என்பது காலத்தையும், வயதையும் கடந்து வெல்லக்கூடியது என்பதை டயானா-எட்கர் ஜோடி இந்த சமூகத்திற்கு நிரூபிக்க முயற்சி செய்கிறது.