ஆண்டிபட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ வாக்குவாதம்

தேனி: ஆண்டிபட்டியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் திமுக எம்பி, எம்எல்ஏ.ஆகியோர் மேடையிலே காரசாரமாக ஒருமையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சண்டை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக.2) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தலைமை வகிக்க, திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி, பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தின் சார்பில் விபத்து நிவாரண தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதனை எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டபோது அந்த ஆணையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், எம்.பி. கையில் இருந்து பறித்து, “இது நான் வாங்கிக் கொடுத்தது, நான் தான் கொடுப்பேன்,” எனக் கூறி பயனாளிக்கு கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து ஒருமையில் திட்டத் தொடங்கினார். இதைக்கேட்ட எம்எல்ஏ.மகராஜனும் கோபத்தில் ஒருமையில் காரசாரமாக பேசினார். மைக்கில் இந்த வாக்குவாதம் பலருக்கும் கேட்டது

ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் இருவரும் உரத்த குரலில் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மைக்கை வாங்கி அவசர அவசரமாக நன்றி உரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைக்க கூறினார். இதனைத்தொடர்ந்து நன்றி கூறப்பட்டு நிகழ்ச்சி முடித்துவைக்கப்பட்டது.

பின்பு எம்பி.எம்எல்ஏ.ஆகியோர் அடுத்தடுத்து அவசரம் அவசரமாக வெளியேறினர்.

தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. மேடையிலே திமுக எம்பி.,எம்எல்ஏ.ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் காரசாரமாக சண்டையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.