உத்தராகண்ட் மேக வெடிப்பு: வெள்ளம், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரம்

ரிஷிகேஷ்: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர்.

வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளனர். மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த நேரத்தில் மத்திய அரசு வழங்கும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் உறுதி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

150+ ராணுவ வீரர்கள்: இன்று மதியம் 1.45 மணி அளவில் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து ஹர்சில் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இருந்து சுமார் 150 வீரர்கள் தாராலி கிராமத்துக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 10 நிமிடத்தில் சென்றனர். அங்கு அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு முதல்கட்ட சிகிச்சையை மருத்துவர்கள் அளிக்கின்றனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என ராணுவ படை தளபதி மந்தீப் தில்லியன் கூறியுள்ளார்.

“40 முதல் 50 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேக வெடிப்பை அடுத்து சுமார் 50 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட தகவல். இந்த சம்பவம் மதியம் சுமார் 2 மணி அளவில் நடந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 35 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பார்கள். பெரிய அளவில் இந்த மீட்பு பணிகள் நடைபெற உள்ளது” என பேரிடர் மேலாண்மை ஆணைய டிஐஜி மொஹ்சென் ஷாஹேதி தெரிவித்துள்ளார்.

ரிஷிகேஷில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் குமார் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2013-ல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு பாதிப்பை காட்டிலும் இந்த முறை ஏற்பட்டுள்ள பாதிப்பு தீவிரமானது என அந்த மாநிலத்தை சேர்ந்த எம்.பி தெஹ்ரி கர்வால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ல் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் கிராமத்தில் நிலவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக புதையும் அபாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

— The Hindu (@the_hindu) August 5, 2025

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.