புதுடெல்லி,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரின் 5-வது போட்டியில் இந்தியா வெற்றி காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான முகமது சிராஜிக்கு இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:-
நாம் முகமது சிராஜை அங்கீகரிக்க தவறி விட்டோம். இப்போது அவருக்கு உகந்த அங்கீகாரம் வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஏனெனில் அவர் மீண்டும் ஒருமுறை முக்கியமான தருணத்தில் தனது மிகச்சிறந்த திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
சிராஜிக்கு வயதாகி வருகிறது. எனவே முக்கியமில்லாத ஆட்டங்களில் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டியது அவசியம். அவரால் இந்திய அணியின் நம்பிக்கையான, ‘நம்பர் ஒன்’ பந்து வீச்சாளராக இருக்க முடியும். எனவே பந்து வீச்சு தாக்குதலை மீண்டும் கட்டமைக்க வேண்டும். ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். சிராஜின் அனுபவத்தால், அவரை சுற்றி அணியை கட்டமைக்க வேண்டும்.
இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரராக இருக்கும் முகமது சிராஜை நாம் கொண்டாட வேண்டும். இந்த முறை பும்ரா அல்ல, சிராஜின் முக்கிய பங்களிப்பால் தொடரை சமனுக்கு கொண்டு வந்துள்ளோம். பும்ரா இல்லாமல் நாம் இரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அதில் சிராஜ் பந்து வீச்சு தாக்குதலை முன்னின்று நடத்தினார்.இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.