புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் புஜாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‘இளம் வீரர்கள் முதிர்ச்சி அடைய சிறிது காலமாகும். சாய் சுதர்சன் ஒரு ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல் கருண் நாயரும் சிறப்பாக செயல்பட்டார். அவர்கள் அனுபவத்தை பெறும் போது ஆட்டமும் தொடர்ந்து மேம்படும்.
இங்கிலாந்து தொடரில் அவர்கள் தடுமாறினாலும் 3-வது வரிசையில் வெற்றிகரமாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். அனைத்து வீரர்களும் எல்லா நேரங்களிலும் 2 அல்லது 3 சதங்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான கடினமான இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் டிரா செய்து இருப்பது இந்திய அணி நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.
இந்த தொடரில் எல்லா வீரர்களும் பங்களித்துள்ளனர். எனவே போகப்போக இந்த அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும். டெஸ்டின் நிறைய பகுதிகளில் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது. தொடர் சமனில் முடிந்திருந்தாலும், வெற்றியை விட எந்தவிதத்திலும் குறைந்தது கிடையாது என்பதே எனது கருத்தாகும். அந்த வகையில் இது இந்திய அணிக்கான வெற்றியாகும். இந்திய கிரிக்கெட் சரியானவர்களின் கையில் இருக்கிறது. அத்துடன் இளம் வீரர்கள் எல்லோரும் விளையாடும் விதத்தை பார்க்கையில் அதிக நம்பிக்கை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் 3 டெஸ்டுகளில் 3-வது வரிசையில் பேட்டிங் செய்து ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். கருண் நாயர் 2 டெஸ்டுகளில் 3-வது வரிசையில் களம் இறங்கியதில் அதிகபட்சமாக 40 ரன்களே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.