கீவ்,
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினை வருகிற 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனையும் சேர்க்க வேண்டும் என அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘உக்ரைனின் பிராந்திய இறையாண்மையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தை மேஜையில் உக்ரைனின் குரலும் உள்ளடக்கியிருக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், ‘உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரான முடிவுகளாகும். அவை எந்த பலனையும் தராது. செத்துப்போன முடிவுகள். அவை ஒருபோதும் வேலை செய்யாது’ என்றும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
ரஷியா செய்தவற்றுக்காக அதற்கு எந்த விருதையும் உக்ரைன் கொடுக்காது எனக்கூறியுள்ள ஜெலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தனது நிலத்தை உக்ரைன் மக்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றும் சாடியிருந்தார்.