புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்

புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா இன்று மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மேற்கொண்ட அமளிக்கு மத்தியில் விவாதமின்றி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகளை களைந்து எளிமைப்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது, இந்த மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, மசோதா தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, 4,500 பக்கங்கள் கொண்ட புதிய வருமான வரி மசோதா 2025-ன் மீது 285 பரிந்துரைகளை வழங்கியது.

புதிய வருமான வரி சட்டத்தில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க வேண்டும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பிறகும் எந்த அபராதக் கட்டணமும் செலுத்தாமல் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த பரிந்துரைகளில், பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா, மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.