இந்த ஒரு காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு வெளியேறுகிறாரா?

இந்தியன் பிரீமியர் லீக் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ள ஒரு செய்தியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த சாம்சனின் இந்த திடீர் முடிவு, அணிக்குள் நிலவும் தலைமை போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த சர்ச்சையின் முக்கிய புள்ளியாக, சக வீரர் ரியான் பராக் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

ரியான் பராக் தான் காரணம்?

சஞ்சு சாம்சனின் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம், ரியான் பராக்கின் திடீர் வளர்ச்சிதான் என முன்னாள் இந்திய வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் உள்ளிட்ட பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஐபிஎல் 2025 தொடரின்போது, தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிவுறுத்தலால், சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில், சில போட்டிகளில் ‘இம்பாக்ட்’ வீரராக மட்டுமே களமிறங்கினார். அந்த நேரத்தில், அணிக்கு ரியான் பராக் தலைமை தாங்கினார். பின்னர், சாம்சன் முழுநேர கேப்டனாக திரும்பிய போதும், காயம் காரணமாக மீண்டும் விலக நேரிட்டது. அப்போதும் பராக் கேப்டனாக பொறுப்பேற்று, தனது தலைமை பண்பால் அணி நிர்வாகத்தை கவர்ந்தார்.

பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில், “ரியான் பராக்கை அடுத்த கேப்டனாக நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால், சாம்சன் போன்ற ஒரு சீனியர் வீரர் எப்படி அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்க முடியும்? இதுதான் உண்மையான காரணமாக இருக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார். இந்த தலைமை போட்டிதான், சாம்சனின் வெளியேற்ற முடிவுக்கு முதல்படியாக அமைந்துள்ளது

ராகுல் டிராவிட்டுடன் விரிசலா?

இந்த விவகாரத்தில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும், சாம்சனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. அணியின் முக்கிய முடிவுகளில் சாம்சனின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும், இந்த ஊகங்கள் அனைத்தையும் ராகுல் டிராவிட், சீசனின் நடுவிலேயே திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், சாம்சனும் சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் பேசும்போது, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் என் உலகம். கேரளாவின் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த எனக்கு, ராகுல் டிராவிட் சார்தான் உலகிற்கு என்னை அறிமுகப்படுத்தினார்,” என நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். இது, இருவருக்கும் இடையே நேரடி மோதல் இல்லை என்பதை காட்டினாலும், அணி நிர்வாகத்தின் முடிவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இந்த நிலைக்கு வழிவகுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிஎஸ்கே-வுக்கு செல்ல வாய்ப்பு

சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில், அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.எஸ். தோனியின் ஓய்விற்கு பிறகு, ஒரு இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் மெட்டீரியலை சிஎஸ்கே தேடி வருகிறது. சாம்சன், தோனிக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார் என பலரும் கருதுகின்றனர். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டம், அணியின் பேட்டிங் வரிசையில் சாம்சனின் முக்கியத்துவத்தை குறைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், 11 ஆண்டுகள் தனது தூணாக இருந்த ஒரு வீரரை, ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவ்வளவு எளிதில் விடுவிக்குமா என்பது சந்தேகமே.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.