நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல்

சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இல கணேசன் பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவர் தனது சிறுவயதிலேயே ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். தன் தொடர் மக்கள் பணியால், இயக்கப் பணியால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக, தமிழக மாநில தலைவராக, தேசிய துணைத் தலைவராக, உயர்ந்து இயக்கப் பணியையும் மக்கள் மேற்கொண்டவர். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியையும் சிறப்பாக பணியாற்றியவர்.

பிரதமர் மோடி அன்பை பெற்றவர். இவரது சிறந்த பணி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு அம்மாநில வளர்ச்சிக்கு அயராது பாடுப்பட்டவர். மேலும் தற்பொழுது நாகலாந்து மாநில ஆளுநராக சிறப்பாக பணியாற்றி தமிழகத்திற்கு புகழ் சேர்த்தவர்.

அரசியலுக்கு அப்பார்ப்பட்டு அனைவரிடமும் அன்போடு பழகக்கூடியவர். மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பணரோடு நெருங்கி பழகியவர். அவர்கள் மறைவிற்கு பிறகு அதே அன்போடு என்னிடமும் பழகியவர். சிறந்த பண்பாளர். அவர்களது இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடிப்பதிலும் மற்றவர்களிடம் கண்ணியமாக பேசுவதிலும் வல்லவர். யாரிடமும் சினந்து பேசமாட்டார். அன்புடன் உபசரித்து வரவேற்பதன் மூலம் மாற்று கட்சியினரையும் நண்பர்களாக்கி கொண்டவர்.

அரசியலில் அவர் சார்ந்த கொள்கையில் சிறு வயது முதல் இறுதி வரை உறுதியாக இருந்தவர். அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியில் அனைத்து பொறுப்புகளையும் வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினர், மிசோரம், மேற்கு வங்காளம், நாகலாந்து போன்ற மாநிலங்களில் ஆளுநராகவும் பதவி வகித்தவர். அனைவரிடமும் நண்பர்களாகவும் எளிமையாகவும் பழகக் கூடிய நல்ல அரசியல் தலைவரை தமிழ்நாடு இழந்து வாடுகிறது.

அவரை இழந்து வாடும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்னாரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.