சஞ்சு சாம்சனை தட்டி தூக்க முன்வந்த கேகேஆர் – ஆனால், அங்கேயும் ஒரு சிக்கல்

Sanju Samson : ஐபிஎல் ஏலம் இன்னும் மூன்று மாதங்களில் நடக்க இருக்கும் முன்பே ஐபிஎல் அணிகளுக்கு இடையே பிளேயர்களை டிரேடிங் செய்யும் பேச்சுவார்த்தை சூடுடிபிடித்துள்ளது. அதில் இப்போதைய ஹாட் லிஸ்டில் இருப்பவர் சஞ்சு சாம்சன் தான். அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் தயாராக இருக்கின்றன என்றாலும், டிரேடிங் மூலம் தங்களது அணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என பல அணிகள் முயற்சி செய்கின்றன. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதற்கு முனைப்பு காட்டினாலும் ராஜஸ்தான் அணி வைக்கும் நிபந்தனைகள் சாம்சனை டிரேடிங் செய்வதற்கு தடையாக இருக்கின்றன. இதனால் ஏலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கும் சில அணிகள் வந்துவிட்டன.

இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முயற்சியை இன்னும் கைவிடவில்லை. கேகேஆர் (KKR) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை பெற, இரண்டு இளம் இந்திய வீரர்களை டிரேடிங் செய்ய முன்வந்துள்ளது. அதாவது, 21 வயதான இளம் பேட்டிங் நட்சத்திரம் அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் இந்திய ஆல்-ரவுண்டர் ரமந்தீப் சிங் ஆகியோரை மாற்று வீரர்களாக வழங்க KKR தயாராக உள்ளது. ஆனால், இவ்விருவரில் ஒருவரை மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு கொடுப்பதற்கு KKR விருப்பம் தெரிவித்துள்ளது.

டிரேடிங் செய்யும் முறை

2009-ஆம் ஆண்டிலிருந்தே ஐபிஎல் போட்டியில் வீரர்களை டிரேடிங் மூலம் மாற்றிக் கொள்ளும் நடைமுறை இருக்கிறது. ஆனால், இம்முறை கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் இரண்டு வகையான டிரேடிங் முறைகள் உள்ளன:

பணப்பரிவர்த்தனை (All-cash): குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது போல, முழு பணத்தையும் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது.

வீரர் எக்ஸ்சேஞ்ச் (Player exchange): ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொரு வீரரை வாங்குவது, இதில் இரு வீரர்களின் ஒப்பந்த தொகையில் ஏற்படும் வித்தியாசத்தை பணமாக கொடுத்து சரிசெய்து கொள்ளலாம்.

கேகேஆர் அணிக்கு இருக்கும் சிக்கல்

சஞ்சு சாம்சனின் தற்போதைய ஒப்பந்த மதிப்பு (book value) 18 கோடி ரூபாய். அதே சமயம், அங்கிரிஷின் ஒப்பந்த மதிப்பு ரூ.3 கோடி, ரமந்தீப்பின் மதிப்பு ரூ. 4 கோடி. எனவே, இவ்விருவரில் ஒருவரை மட்டுமே டிரேடிங் முறையில் கொடுத்தால், KKR அணி கூடுதலாக ரூ. 15 கோடியோ அல்லது ரூ. 14 கோடியோ ராஜஸ்தான் அணிக்கு செலுத்த வேண்டும். இந்த தொகை கொடுக்க கேகேஆர் அணிக்கு சிக்கலாக உள்ளது. ஏனென்றால் ஐபிஎல் ஏலத்தில் மற்ற நல்ல பிளேயர்களை ஏலம் எடுக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே அணி மறுப்பு

சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் டிரேடிங் செய்ய ராஜஸ்தான் விரும்புகிறது. ஆனால், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, அல்லது நட்சத்திர பேட்ஸ்மேன் சிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இவர்களை கொடுக்க சென்னை அணிக்கு மறுத்துவிட்டது.

கொல்கத்தா அணி சாம்சனை விரும்புவது ஏன்?

கொல்கத்தா அணிக்கு, சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறார். ஏனென்றால், அவர் கேப்டனாக இருப்பது மட்டுமின்றி கேகேஆர் அணிக்கு பல ஆண்டு பிரச்சனையாக இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சிக்கலையும் தீர்த்து வைப்பார். மற்றொன்று விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பிரச்சினையையும் சாம்சன் தீர்த்து வைப்பார். இதன் காரணமாகவே சாம்சனை டிரேடிங்கில் பெற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்புகிறது.

About the Author

S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.