ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? – அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக அனுராக் தாகூர் எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 84-ம் வாக்குச்சாவடியில் உள்ள ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அதில் ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளனர் என்றும் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித் திருந்தார். அவர் பேசும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் தமிழக பாஜக பதிவிட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு என தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11-ம் எண் என்பது தனி வீடல்ல. அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண். 84 விவரங்களின் படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இதில் ரஃபி என்பவரின் பெயர் வரிசை எண் 50-லும், 52-ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், காணொலியில் குறிப்பிட்டதுபோல், ரஃபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை.

மேலும், வாக்குச்சாவடி எண் 157-ல், ரஃபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.