காத்மண்டு,
இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அண்டை நாடான நேபாளத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக காத்மண்டு நகருக்கு சென்று சேர்ந்த அவர் அந்நாட்டு ஜனாதிபதி ராம்சந்திர பாவ்டெல்லை, அவருடைய அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பான விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியை, சிங்கா தர்பாரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இதில், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளின் உறவை நவீனப்படுத்துவதற்கான செயல்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின.
இதேபோன்று, நேபாள வெளியுறவு துறை மந்திரி டாக்டர் அர்ஜு ராணா தியூபாவையும் அவர் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், இருவரும், பன்முக தன்மை கொண்ட இந்திய-நேபாள உறவை அனைத்து பிரிவுகளிலும் இன்னும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விசயங்கள் ஆகியவை பற்றிய பார்வைகளை பெரிய அளவில் பரிமாறி கொண்டனர் என தெரிவித்து உள்ளது.