ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை யார் வழிநடத்த போகிறார்கள் என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரின் வருகை அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய பவுலர்கள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ராவின் வருகை
இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரின்போது, பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆசிய கோப்பை தொடரில் விளையாட தான் தயாராக இருப்பதாக பும்ரா, தேர்வு குழுவிடம் தெரிவித்திருக்கிறார். டி20 வடிவில் நடைபெறவிருக்கும் இந்த தொடரில், பும்ராவின் அனுபவமும், துல்லியமான யார்க்கர் பந்துவீச்சும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
வேகப்பந்து வீச்சாளர் யார் யார்?
பும்ராவுடன் இணைந்து இந்திய வேகப்பந்து வீச்சு தாக்குதலில் இடம்பிடிக்கப் போகும் மற்ற வீரர்கள் யார் என்ற போட்டி தீவிரமடைந்துள்ளது.
முகமது சிராஜ்: டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், டி20 அணியில் அவரது இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இளம் வீரர்களின் போட்டியால், அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சவாலானதாக இருக்கலாம்.
அர்ஷ்தீப் சிங்: இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பந்துவீச்சுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுப்பார் என்பதால், அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா: இந்த இளம் வீரர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தி, அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியா: ஆல்-ரவுண்டரான இவர், வேகப்பந்து வீச்சில் தனது பங்களிப்பை அளிப்பதன் மூலம், அணிக்கு சமநிலையைக் கொடுப்பார்.
முகமது ஷமி: அதே சமயம், அனுபவ வீரரான முகமது ஷமி, டி20 போட்டிகளுக்கான திட்டத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்வர் குமார்: நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பிடிக்க தவறிய புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டு ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்நிலையில் அவர் அணியில் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல கலீல் அகமதும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அணித் தேர்வு
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி, வழக்கமான 15 பேருக்குப் பதிலாக 17 வீரர்களை கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. டி20 போட்டிகளின் தன்மையை கருத்தில் கொண்டு, கூடுதல் வீரர்களை தேர்வு செய்ய தேர்வு குழு திட்டமிட்டுள்ளது. டி20 போட்டிகளின் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த தொடரிலும் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆசிய கோப்பையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அடுத்து வரும் உலக கோப்பை தொடர்களையும் மனதில் வைத்து, ஒரு வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள அணி தேர்வுக்குப் பிறகு, ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் முழுமையான விவரம் தெரிந்துவிடும்.
About the Author
RK Spark