Asia Cup 2025, Team India Squad: ஆசிய கோப்பை 2025 தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்திருக்கிறது. 2026ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில்கொண்டு, ஆசிய கோப்பை தொடரும் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. இந்திய டி20 அணியும் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் ஒன்று கூட இருக்கிறது.
Asia Cup 2025: இந்திய அணி ஸ்குவாட் அறிவிப்பு
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி ஸ்குவாடுக்கும், தற்போது அறிவிக்கப்பட உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் எனலாம். பந்துவீச்சு படையில் பும்ரா இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. வருண் சக்ரவர்த்தி நிச்சயம் தொடர்வார்.
அதே நேரத்தில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் இடமும் உறுதி எனலாம். ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்திய அணியின் ஸ்குவாட் நாளை (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட இருக்கிறது.
Asia Cup 2025: ஓபனிங் பேக்அப் வீரர் யார்?
இதில் சுப்மான் கில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் இடம்பெற்றால் அணியின் காம்பினேஷனில் பெரிய சிக்கல் ஏற்படும். அவரை பிளேயிங் லெவனில் வைக்காமலும் இருக்க முடியாது. அவரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்தால் சஞ்சு சாம்சனை ஓப்பனிங்கில் விளையாட வைக்க இயலாது. எனவே, டி20 அணியில் கில்லுக்கு இடமில்லை என்பதே அனைவரின் கூற்றாக இருக்கிறது. இருப்பினும் ஓபனிங் பேக்அப் வீரராக கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது. ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Asia Cup 2025: ரிஷப் பண்ட், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை
மறுபுறம், கடந்த பிப்ரவரி மாத இந்திய அணியின் டி20 ஸ்குவாடில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரிஷப் பண்ட் பெரியளவில் டி20ஐ போட்டிகளில் விளையாடவில்லை. கடைசியாக 2024 இலங்கை சுற்றுப்பயணத்தில் ரிஷப் பண்ட் விளைாடியிருந்தார், தற்போது அவர் காயத்தில் இருந்து குணமாகி வருகிறார்.
அதேபோல், கேஎல் ராகுலும் இந்திய டி20 ஸ்குவாடில் இடம்பெற்று வெகு காலமாகிவிட்டது. 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் கேஎல் ராகுலுக்கு டி20இல் வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் இவர் ஓபனிங்கிலோ அல்லது டாப் ஆர்டரிலோ இடமில்லை என்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனலாம்.
Asia Cup 2025: துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பில்லை
அதே நேரத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ஸ்குவாடில் இடம்பெற்று வந்த விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரேல் பினிஷிங்கிற்கு பெயர் பெற்றவர். ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பெரியளவில் சோபிக்கவில்லை. அதிலும் குறிப்பாக பினிஷிங் சரியில்லாமல்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் பல போட்டிகளை கோட்டைவிட்டது. இந்தச் சூழலில், இந்திய அணி துருவ் ஜூரேலுக்கு பதில், பேக்அப் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் ரோலுக்கு வேறொரு வீரரை எடுக்க திட்டமிட்டுள்ளது.
Asia Cup 2025: ஜித்தேஷ் சர்மா ஏன்?
இந்நிலையில், ஆர்சிபி விக்கெட் கீப்பரும், பினிஷிங்கில் அதிரடி காட்டும் ஜித்தேஷ் சர்மாவுக்கு (Jitesh Sharma) இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு பேக்அப்பாக ஜித்தேஷ் சர்மா ஸ்குவாடில் இருப்பார். ஒருவேளை, சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இல்லையென்றால் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
ஜித்தேஷ் சர்மா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்ஸில் 261 ரன்களை 176.35 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். இதில் 24 பவுண்டரிகள், 17 சிக்ஸர்கள் அடக்கம். நல்ல பார்மில் இருந்து வருகிறார் என்பதால் கௌதம் கம்பீர் – அஜித் அகர்கர் ஆகியோர் இவருக்கு வாய்ப்பு வழங்கலாம். 7 டி20ஐ இன்னிங்ஸ்களில் இவர் 100 ரன்களை அடித்துள்ளார்.