போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் – என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம்.

டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு  தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு சுமார் 10.30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கூண்டு கட்டிய டெம்போவை காவலர் பெல்ஜின் ஜோஸ் (வயது 32) கைகாட்டி நிறுத்தினார்.

டெம்போ நின்றதும் வாகனத்தை சோதனையிட முயன்றுள்ளார். போக்குவரத்து காவலர் சோதனையிடும் முன்பு தப்பிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் டிரைவர் டெம்போவை இயக்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட டெம்போ டிரைவர் அருள் சுந்தர்

சோதனையில் தப்ப முயன்ற டிரைவர்

இதை பார்த்த காவலர் பெல்ஜின் ஜோஸ் டிரைவர் பக்கமுள்ள கதவை பிடித்துக் கொண்டு கீழே உள்ள கம்பியில் காலை வைத்து கீழே விழாதவாறு நின்று கொண்டு டிரைவரிடம் வண்டியை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

அதற்கு, ‘உங்களால் எங்களுக்கு தொழில் செய்ய முடியவில்லை’ எனக்கூறியதுடன் கெட்ட வார்த்தை பேசியபடி டிரைவர் டெம்போவை வேகமாக அங்கிருந்து ஒட்டிச் சென்றுள்ளார்.

வேகமாக டெம்போ சென்றதால் கதவில் பிடித்தபடி நின்ற போலீஸால் கீழே குதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, டெம்போவின் வலதுபுறம் தொங்கிய படியே சென்றுள்ளார்.

நடுரோட்டில் தள்ளி விட்ட டிரைவர்

டெம்போ சாலையில் இடது புறமாக சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து வலதுபுறம் வரும் வாகனங்கள் போலீஸ்காரர் மீது மோதுவதற்காக டெம்போ டிரைவர் வலது புறமாக செலுத்தி போலீஸ்காரருக்கு மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் பயந்து போன போலீஸ்காரர் சத்தம்போட்டு அலறியபடியே டெம்போவை பிடித்தபடி நின்றுள்ளார்.

அதே நேரத்தில் போக்குவரத்து போலீசார் அந்த டெம்போவை துரத்தி செல்வதை கவனித்த டிரைவர், தொங்கி கொண்டு சென்ற போலீஸின் முகத்தில் கையால் பலமாக குத்தி கீழே தள்ளிவிட்டார். பின்னர், டெம்போவை வேகமாக ஓட்டி தப்பி சென்றுள்ளார்.

டெம்பி டிரைவர் தாக்கியதால் சாலையில் விழுந்து கிடந்த போலீஸை மீட்ட பொதுமக்கள்

படுகாயமடைந்த போலீஸ்

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் டெம்போவில் தொங்கியபடி சென்றதுடன், ஓடும் டெம்போவில் இருந்து சாலையில் தள்ளிவிடப்பட்டதால் காவலர் பெல்ஜின் ஜோஸ் படுகாயத்துடன் சாலையில் விழுந்து கிடந்தார்.

அதைப்பார்த்த கடைகாரர்களும், பொதுமக்களும் காவலரை தூக்கி சாலையோரம் பாதுகாப்பாக கொண்டுசென்றனர்.

அப்போது டெம்போவை துரத்தி வந்த போக்குவரத்து போலீசார் அங்குசென்று படுகாயத்துடன் இருந்த பெல்ஜின் ஜோசை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கள்ளியங்காட்டிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் கைது

இதற்கிடையே டிரைவரை கைது செய்வதற்காக தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் டெம்போவை துரத்திச் சென்றனர்.

அப்போது போலீஸ் துரத்துவதை கண்ட டெம்போ டிரைவர் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கையில் டெம்போவை நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

அந்த டெம்போ நின்ற இடத்தின் அருகே மப்டியில் நின்றபடி போலீஸார் கண்காணித்து கொண்டிருந்தனர். போலீஸ் அங்கு இல்லை என நினைத்து, நேற்று மாலை டெம்போவை எடுத்து செல்ல அங்கு சென்ற டிரைவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

police patrolling

விசாரணையில் டெம்போவை ஓட்டிவந்தவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம், இந்திரா காலனியை சேர்ந்த அருள் சுந்தர் (வயது 40) என தெரியவந்தது.

அவர், நெல்லை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைக்கு கேரள மாநிலத்தில இருந்து உணவு கழிவுகளை எடுத்துச் சென்றதும், அதற்கான ஆவணங்கள் இல்லாததும், மேலும் மதுபோதையில் டெம்போவை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதன் காரணமாகவே போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது. பணியில் இருந்த காவலரை கொலை செய்ய முயன்றதாக டிரைவர் அருள் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.