மும்பைக்கு ரெட் அலர்ட்: அவசர எண்கள் அறிவிப்பு; ஒடிசா, டெல்லி, இமாச்சலிலும் கனமழை

மும்பை: மும்பை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பால்கர், சிந்துதுர்க், ஔரங்காபாத், ஹிங்கோலி, ஜல்கான், ஜல்னா, நான்டெட், பர்பானி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 17-18 தேதிகளில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, கிருஷ்ணா நதி மற்றும் அதன் துணை நதிகளை ஒட்டிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்பாக மும்பை காவல்துறை தலைவர் வெளியிட்ட எச்சரிக்கையில், “தயவுசெய்து அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பயணத்தை கவனமாகத் திட்டமிட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும். எங்கள் அதிகாரிகளும், ஊழியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர் மற்றும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தயவுசெய்து 100 / 112 / 103 என்ற எண்ணை டயல் செய்யவும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆகாசா ஏர் தனது செய்திக்குறிப்பில், “மும்பை, பெங்களூரு, கோவா மற்றும் புனேவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பயண நேரத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம், “மும்பை முழுவதும் மழை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில பகுதிகளில் சாலைப் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் தேங்கி நிற்கும் நீர் காரணமாக விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்: மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக ஜம்மு-காஷ்மீர் அரசு இன்று (ஆகஸ்ட் 18) ஜம்மு பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு நாட்களில் கிஷ்த்வார் மாவட்டத்தின் சோசிட்டி கிராமத்திலும், கதுவா மாவட்டத்தின் ஜோத் காடி மற்றும் ஜங்லோட் பகுதிகளிலும் ஏற்பட்ட மூன்று மேக வெடிப்புகளில் அறுபத்தெட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 122 பேர் காயமடைந்தனர்.

டெல்லி: டெல்லியில் கனமழை தொடர்வதால் யமுனை நதி ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் 206 மீட்டரை எட்டும் எனவும், இது 205.33 மீட்டர் எனும் அபாய அளவைக் தாண்டிய அளவு என்றும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சல் மாநிலம் முழுவதும் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடர் பருவமழை காரணமாக 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 136 பேர் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மேக வெடிப்புகள், நீரில் மூழ்குதல் மற்றும் மின்சாரம் பாய்தல் போன்ற மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 127 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.

கனமழையால் இமாச்சலில் மொத்தம் 2,201 சாலைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன. 2,550 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 1,145 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பருவமழை காரணமாக இமாச்சலில் 2,173 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா: கனமழை காரணமாக ஒடிசாவின் மல்கன்கிரி மற்றும் நபரங்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

கோராபுட் மாவட்டத்தில், காகிரிகும்மா பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக காகிரிகும்மா மற்றும் தலமெட்டிங்கை இணைக்கும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், நாராயண்பட்னா மற்றும் தலகுமண்டி ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.