குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா ஆளுநரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் கள அனுபவம் நமது நாட்டை பெரிதும் வளப்படுத்தும். அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து நம் தேசத்திற்கு சேவை செய்வார்” என்று தெரிவித்தார்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார். கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு பாஜக நாடாளுமன்றக் குழு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜூலை 31, 2024 முதல் மகாராஷ்டிராவின் 24-வது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக அவர் ஜார்க்கண்ட் ஆளுநராக (பிப்ரவரி 2023 – ஜூலை 2024) பணியாற்றினார். மேலும், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் (மார்ச்–ஜூலை 2024) கூடுதல் பொறுப்பை வகித்தார்.

பாஜகவின் மூத்த தலைவரான ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். மேலும், அவர் தமிழக பாஜக மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நலக் காரணங்களைக் காட்டி ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அப்பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.