ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 30). இவர் திருமண வரன் பார்த்து வந்தார். சமீபத்தில் திருமண தகவல் மையத்தில் கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்த இளம்பெண் வரன் தேடிய தகவல் தெரியவந்தது. இதை பார்த்த கார்த்திக் ராஜ், அதில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு இளம்பெண்ணுடன் பேசினார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதோடு இளம்பெண்ணை நேரில் பார்க்க வருவதாக தெரிவித்தார். அதன்படி, தொடுபுழாவில் இளம்பெண் பணிபுரியும் தனியார் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருடன் கார்த்திக் ராஜ் பேசினார். பின்னர் இளம்பெண்ணின் குடும்பத்தினருடன் பேசியதை அடுத்து, 2 பேருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கார்த்திக் ராஜ் அணிந்து பார்ப்பதாக கூறி, அவரிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து துணி எடுப்பதற்காக இளம்பெண்ணை ஜவுளிக்கடைக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு 3-வது மாடியில் இளம்பெண் துணிகளை பார்த்து தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை அங்கேயே விட்டு விட்டு கார்த்திக் ராஜ் நைசாக தப்பி சென்று விட்டார். அதோடு 2 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டார். இதுகுறித்து இளம்பெண் தொடுபுழா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணிடம் 2 பவுன் நகையை அபேஸ் செய்த கார்த்திக் ராஜை போலீசார் கைது செய்தனர்.