அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை 2025க்காண போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டி20 வடியில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆசிய கோப்பையில் இடம் பெறும் வீரர்கள் தான் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்காண அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
எட்டு வீரர்களின் இடம் உறுதி!
ஆசிய கோப்பைக்காண இந்திய அணியில் கிட்டத்தட்ட எட்டு வீரர்களின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள ஏழு பேரின் இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர உள்ளார். சமீபத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐயின் பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த சில தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் இந்த தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பைக்காண இந்திய அணியில் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோரின் பெயர்கள் நிச்சயம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கழட்டி விடப்படும் வீரர்கள்?
15 பேர் கொண்ட அணியில் 8 வீரர்களின் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 7 வீரர்களுக்கான இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே, பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் மற்றும் கில் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறுவார்களா மாட்டார்களா என்ற கேள்வி நிலவி வருகிறது. காரணம் இவர்கள் அனைவருமே டி20 அணியில் அவ்வப்போது இடம் பெற்று பின்னர் நீக்கப்பட்டு வருகின்றனர்.
சஞ்சு சம்சன் கடந்த சில தொடர்களில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். சில போட்டிகளில் சதம் அடித்து இருந்தாலும், தொடர்ந்து ரன்கள் அடிக்க தவறி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவரின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. ஓப்பனிங்கில் சுப்மண் கில் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்திய இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடிய கில் மீண்டும் டி20 அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியிருந்த சிராஜிற்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிராஜ் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணிச்சுமை காரணமாக பும்ரா ஆசிய கோப்பையில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த முழுமையான தகவல்கள் இல்லை. ஆசிய கோப்பை முடிந்த பிறகு உடனடியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவரின் அதிரடியான ஆட்டம் அணிக்கு பக்கபலமாக இருந்தது. இதன் காரணமாக அவர் மீண்டும் டி20 இந்திய அணியில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மிடில் ஆர்டரில் இவர்களை எடுக்கலாமா வேண்டாமா என்று பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
About the Author
RK Spark