“2029-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்!” – தேஜஸ்வி யாதவ் சூளுரையால் பரபரப்பு

பாட்னா: 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு எதிர்க்கட்சிகள் பாடுபடும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சூளுரைத்தார். இண்டியா கூட்டணியின் முகமாக ராகுல் இருப்பார் என்பதற்கான குறியீடாக அவரின் பேச்சு அமைந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17 முதல் பிஹாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தி வருகின்றனர். இன்று பிஹாரின் நவாடாவில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “அடுத்த முறை, 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்குகளைத் திருடவும், பிஹார் மக்களை முட்டாளாக்கவும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பிஹாரிகளின் வாக்களிக்கும் உரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது.

நாங்கள் பிஹாரிகள். ஒரு பிஹாரி அனைவரையும் விட உயர்ந்தவர். சிறப்பு தீவிர திருத்தம் மூலம், பிஹாரில் உயிருடன் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்து பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல்களில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குகளின் கொள்ளை, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் மிக மோசமாகிவிட்டது, அதை அவசரமாக மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த பழைய மற்றும் மோசமான அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம் என்று இளைஞர்கள் தீர்மானி விட்டனர்” என்று தேஜஸ்வி கூறினார்.

தலைமை குறித்த பிரச்சினையால் இண்டியா கூட்டணி தடுமாறி வருகிறது. கூட்டணிக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததால், பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்டாமலேயே இண்டியா கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில், ராகுலை பிரதமராக்குவோம் என தேஜஸ்வி கூறியுள்ளது, ராகுலுக்கான ஆதரவு கூட்டணிக்குள் பெருகுவதன் அறிகுறியாக மாறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.