நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக தற்போது காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இத்தகைய சூழலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

மறுபக்கம், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை தங்கள் சார்பில் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம், குடியரசு துணைத் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், “நான் தமிழ்நாட்டிலிருந்து தலைநகருக்குப் போனது, தமிழ்நாட்டுக்கு என்னென்ன பயன்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கும், அவை கிடைக்கவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்பதற்கும்தான்.

எனக்கு நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம். இதில், தமிழ்நாட்டையும் மனதில் கொண்டிருப்பவர்கள் யார் என்றுதான் தேர்ந்தெடுக்க முடியும்.
எங்கள் கூட்டணியில் பல ஆளுமைகள் இருக்கின்றனர். அதில் எனக்கு நெருக்கமான, தமிழர்களுக்கு நெருக்கமான ஆளுமை என்று பார்த்தால் அது தமிழக முதல்வர்தான்.
அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று கூறினார்.