செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை கிளாசிக்கல் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முதல் 40 நகர்த்தலுக்கு 90 நிமிடம் ஒதுக்கப்படும் அதன் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடமும், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 30 வினாடியும் வழங்கப்படும்.
தொடக்க நாளில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- குகேஷ் மோதினர். இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 36-வது நகர்த்தலில் உலக சாம்பியன் குகேசை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கினார். அமெரிக்காவின் லெவொன் அரோனியன் 41-வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை வென்றார். மற்ற ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.