சீன வெளியுறவு மந்திரி வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர். பின்னர் சீன வெளியுறவு மந்திரி வாங் யி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும். எங்களின் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் இடையே நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கப் பாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக ஜெய்சங்கரிடம் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்று வாங் யி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்ற போது உரம், அரிய வகை கனிமங்கள் வினியோகம் தொடர்பான பிரச்சினையை வாங் யியிடம் எழுப்பியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது இந்த உறுதியை அளித்துள்ளார். தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.