ஆசிய கோப்பை: கில்லுக்காக தேர்வுக்குழு அவர்களுக்கு அநியாயம் செய்துவிட்டது – அஸ்வின் விமர்சனம்

சென்னை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மும்பையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் கூடி ஆலோசித்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவும் தனது யோசனைகளை தெரிவித்தார். இதன் முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியல் வெளியிடப்பட்டது.

டி20 கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக தொடக்க வரிசையில் அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டிருப்பதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். அந்த சூழலில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

அத்துடன் அந்த அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனைத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சுப்மன் கில்லுக்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்திய தேர்வுக்குழு அநியாயம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ஸ்ரேயாஸ் ஐயருக்கு உறுதியான தகுதிகள் உள்ளன. அவர் அணியில் இல்லை. ஆனால் அவர் உங்களை சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வைத்தார். சுப்மன் கில் அபாரமான பார்மில் இருப்பதாக நீங்கள் வாதிட்டால், ஐயரும் ஓரளவு நல்ல பார்மில் இருக்கிறார். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யார் பதிலளிப்பார்கள்? ஸ்ரேயாஸ் என்ன தவறு செய்தார்.

அவர் கொல்கத்தா அணிக்காக அற்புதமாக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தார். அங்கிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்ற அவர் 2014 க்குப் பிறகு முதல் முறையாக அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அவர் ஷார்ட் பால் பிரச்சனையை சரி செய்துவிட்டார். ஐபிஎல்-ல் ககிசோ ரபாடா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களை எளிதாக அடித்து விளையாடினார். அவருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். இது மிகவும் அநியாயமானது” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.