புதுடெல்லி,
தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷபாப் அலி (47). பெயிண்டர். இவரது மனைவியை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை என்று அவரது தோழி ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண், அவர் கணவராலேயே கொலை செய்து புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. கேமரா காட்சிகள் உள்ளிட்ட தடயங்களுடன் அவரை தேடியபோது அந்த பெண் கடைசியாக அவரது கணவருடன், காரில் பயணம் செய்த காட்சி கேமராக்களில் பதிவாகி இருந்தது.
காரில் செல்லும்போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். மற்ற 3 ஆண்களும் காரில் பயணித்து உள்ளனர். இதையடுத்து அவரது கணவர் ஷபாப் அலியிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்து, தன் மனைவிக்கு தூக்க மாத்திரைகள் மற்றும் பூச்சி மருந்து கொடுத்து கொன்றதாக ஷபாப் அலி கூறி உள்ளார்.
இதில் இறந்துபோன அவரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து காரில் எடுத்துச் சென்று இரவோடு இரவாக சந்தன்ஹோலா கல்லறை தோட்டத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சி அடைய வைத்தார். இதையடுத்து போலீசார், புதைக்கப்பட்ட அவரது மனைவியின் உடலை தோண்டி எடுத்தனர். உடல் உறுப்புகள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதனால் பெண் மாயமான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, ஷபாப் அலி கைது செய்யப்பட்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் பெயிண்டர், தன்வீர் கான் (25) மற்றும் எலக்ட்ரீசியன் ஷாருக் கான் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.