புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும்.
இதுபற்றி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஆன்லைன் விளையாட்டு தளங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு பந்தயம் மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட செயலி குறித்த மசோதாவை அங்கீகரித்துள்ளது. பந்தயம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான சமூக தாக்கத்தை கட்டுப்படுத்துவதும், இளைஞர்கள் மோசடிக்கு ஆளாகாமல் தடுப்பதும்,
சூதாட்டத்துக்கு அபராதம் விதிப்பதும் இந்த மசோதாவின் முதன்மை நோக்கமாகும். இந்த மசோதா இளைஞர்களை தீங்கு விளைவிக்கும் கவனச்சிதறல்களில் இருந்து விலக்கி, இந்த விளையாட்டுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளை குறைக்க உதவும்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஆன்லைன் சூதாட்ட செயலி குறித்த மசோதா இன்று (புதன்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கு மற்றும் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு அல்லது நிதியை அங்கீகரிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் முன்மொழிவதாக தகவல் வெளியாகி உள்ளது.