நடிகர் மம்மூட்டி உடல்நலம் குணமாகி மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார். மம்மூட்டி உடல்நலம் சரியில்லாமல் கடந்த 7 மாதங்களாகச் சிகிச்சைகள் எடுத்து வந்தார்.
மம்மூட்டி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் சபரிமலையில் அவருக்காக அர்ச்சனை செய்திருந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
அதைத் தொடர்ந்து, அவர் உடல்நலம் குணமாகி மீண்டும் படப்பிடிப்புகளுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் இணையத்தில் பரவி வந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், மோகன்லாலும் மம்மூட்டியுடனான ஒரு புகைப்படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து, மலையாள சினிமா நட்சத்திரங்கள் பலரும் மம்மூட்டியின் மீள் வரவைக் கொண்டாடத் தொடங்கினர்.
மம்மூட்டியின் உடல்நிலை தொடர்பாகவும், சிகிச்சையின்போது எப்படியான விஷயங்களை அவர் கடந்து வந்தார் என்பது குறித்து, அவருடைய நண்பரும், நடிகரும், எழுத்தாளருமான வி.கே.ஶ்ரீராமன் பேசியிருக்கிறார்.
வி.கே.ஶ்ரீராமன், “சிகிச்சையின் ஆரம்பக் கட்டங்களில், அவர் உணவின் சுவை தெரியவில்லையெனவும், மணம் உணரும் திறனை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார்.
மம்மூட்டி அவரே தொலைப்பேசியில் அழைத்து, தான் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறினார்.
அவரது குரலில் ஒருபோதும் பலவீனத்தின் அறிகுறி இருந்ததில்லை. அவர் பேசும்போது ஒரு நோயாளியின் குரல் போலவே இல்லை.

எப்போதும் இருக்கும் அதே வலிமை, அதே ஆற்றல் இப்போதும் இருக்கிறது. அவர் என்னைத் தொடர்ந்து அழைத்துப் பேசுகிறார்.
முதலில், அவர் அழைக்கும்போது, உணவு சுவை தெரியவில்லை என்றோ நடப்பது கடினமாக இருக்கிறது என்றோ குறிப்பிடுவார்.
ஆனால், அவர் அந்தப் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பெரும்பாலும், எங்கள் உரையாடல்கள் வேறு விஷயங்களைப் பற்றியதாக இருக்கும்.
சொல்லப்போனால், சில நேரங்களில் அரசியல், சில நேரங்களில் விவசாயம் எனப் பல விஷயங்கள் தொடர்பாகப் பேசுவோம்” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…