ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: "குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதை தடுக்க வேண்டும்" – அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவான, ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அன்புமணி, “பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பா.ம.க போராடி வருகிறது.

அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை தி.மு.க அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை.

அதனால் நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இத்தகைய சூழலில்தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றைத் தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்ச நீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும்.

அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும், பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.