ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பவே, சபாநாயகர் ஓம் பிர்லா, “இவ்வளவு முக்கியமான மசோதாவைப் பற்றி விவாதிக்க நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேள்வியெழுப்பினார்.

இருப்பினும் கோஷங்கள் தொடரவே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் நாளையோடு முடிவடையும் நிலையில், மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில், அடுத்ததாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக மாறும்.
1. ஆன்லைன் சூதாட்ட (பணம் கட்டி விளையாடுதல்) விளையாட்டுகளுக்கு தடை:
திறன், வாய்ப்பு அல்லது இந்த இரண்டின் அடிப்படையிலான எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் முற்றிலும் தடை.
இந்த விளையாட்டுகளை எந்த வகையான ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தவோ முடியாது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் இதர பணப்பரிமாற்ற நடைமுறைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும்.
நாட்டில் தற்போது செயல்பாட்டிலுள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ் தடுக்கப்படும்.

2. ஆன்லைன் கேமிங் ஆணையத்தை நிறுவுதல்:
ஆன்லைன் விளையாட்டு செயலிகள் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க தேசிய ஆன்லைன் கேமிங் ஆணையத்தை அமைக்க இந்த மசோதா முன்மொழிகிறது. இதன் செயல்பாடுகள்…
* ஆன்லைன் விளையாட்டுகளை வகைப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தல்.
* ஒரு விளையாட்டு சூதாட்ட விளையாட்டாகத் தகுதி பெறுகிறதா என்பதைத் தீர்மானித்தல்.
* ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளைக் கையாளுதல்.
* ஆன்லைன் விளையாட்டுகள் நாட்டின் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் மற்றும் நடைமுறைக் குறியீடுகளை வெளியிடுதல்.
3. குற்றங்கள் மற்றும் அபராதங்கள்:
* ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் அல்லது அதற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1 கோடி வரை அபராதம் அல்லது இவையிரண்டும்.
* ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தினால் ரூ. 50 லட்சம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
* ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 கோடி வரை அபராதம் அல்லது இவையிரண்டும்.
* மீண்டும் அதே குற்றம் செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு, ரூ. 2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

4. சமூக (Social) மற்றும் கல்வி விளையாட்டுகளை ஊக்குவித்தல்:
ஆன்லைன் சமூக விளையாட்டுகளை அங்கீகரிக்கவும், வகைப்படுத்தவும், பதிவு செய்யவும் அரசை இந்த மசோதா அனுமதிக்கிறது.
பாதுகாப்பான, வயதுக்கு ஏற்ற சமூக மற்றும் கல்வி சார்ந்த விளையாட்டுகளை உருவாக்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான தளங்களை உருவாக்குவதன் மூலம் இது கொண்டு வரப்படும்.
இதில் இந்தியாவின் விழுமியங்களுடன் இணைந்த கலாச்சார மற்றும் கல்வி விளையாட்டுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

5. இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) ஊக்குவித்தல் மற்றும் அங்கீகரித்தல்:
இ-ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் சட்டப்பூர்வ போட்டியாக அங்கீகரிக்கப்படும்.
இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளை நடத்துவதற்கும், பயிற்சி அகாடெமிகள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப தளங்கள் ஆகியவற்றை நிறுவுவதற்கும் மத்திய விளையாட்டு அமைச்சகம் வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளை உருவாக்கும்.
ஊக்கத் திட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் விளையாட்டுக் கொள்கையில் இ-ஸ்போர்ட்ஸை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றையும் இம்மசோதா வழங்குகிறது.