புதுடெல்லி: குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘ஆளுநர் ஒன்றும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய அரசின் பிரதிநிதி’ என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று 2-வது நாளாக நடந்தது. அப்போது நடந்த வாதம்:
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கலாம், மறுக்கலாம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என 4 வாய்ப்புகள் உள்ளன. அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அவை காலாவதி ஆகிவிட்டதாகவே கருத வேண்டும்.
நீதிபதிகள்: அப்படியென்றால் மொத்த அதிகாரமும் ஆளுநருக்குத்தான் உள்ளது என்பதுபோல உள்ளது. அந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதையும் மறந்துவிடக் கூடாது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவிக்கலாம். அதேநேரம் ஆளுநர் காரணமின்றி ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக கிடப்பில் போட்டு வைக்க முடியாது. இவ்வாறு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதே இந்த விவாதத்தின் முக்கிய கருப்பொருள்.
சொலிசிட்டர் ஜெனரல்: ஆளுநர் ஒன்றும் நீட்டிய இடங்களில் கண்களை மூடிக்கொண்டு கையெழுத்து போடும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய அரசின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவர் மூலமாகவே ஆளுநரும் நியமிக்கப்படுகிறார். அப்படியென்றால் இதுவும் ஒருவகையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடே.
அரசியல், பொதுப் பணியில் அனுபவம் பெற்றவர்களே ஆளுநராக நியமிக்கப்படுகின்றனர். ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதா ஒருவரது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் சுயவிருப்புரிமை அதிகாரத்தை ஆளுநர் அபூர்வமாக பயன்படுத்த முடியும்.
நீதிபதிகள்: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, அதில் திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். ஒருவேளை ஒப்புதல் அளிக்காமல் போனால் மாநில அரசு அவரை அணுகி அந்த மசோதாவை திருப்பி அனுப்பி வைக்க கோரலாம்.
ஒரு மசோதா முதல்முறையாக ஒப்புதலுக்கு வந்தால், அதை ஆளுநர் மறுக்கவோ, திருப்பி அனுப்பவோ முடியும். ஆனால், மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட முடியாது. ஆளுநர், பேரவைக்கான அதிகாரம் இரண்டும் பலனற்றுப் போகும் வகையில் செயல்படக் கூடாது.
தலைமை நீதிபதி கவாய்: அரசியல் சாசன சட்டத்துக்கான விளக்கம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியாது. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர்கள், பேரவைத் தலைவர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை பொருத்து மாறும்.
ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான கால நிர்ணயம் கடந்த காலங்களில் இல்லைதான். அதனால் என்ன பயன் கிடைத்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நோயாளி உயிரிழந்தது போலத்தான். இவ்வாறு கூறிய நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (ஆக.21) தள்ளி வைத்துள்ளார்.