வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்

மாஸ்கோ: இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார ஒத்துழைப்புக்கான இந்தியா – ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான ஆணையத்தின் 26-வது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷ்ய முதல் துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் தலைமையிலான குழுவுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்ததை அடுத்து, பிற நாடுகளுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பின்னணியில், மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. 2021-ல் 13 பில்லியன் டாலராக இருந்த இந்திய-ரஷ்ய வர்த்தகம், 2024-25-ல் 68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 2021-ல் 6.6 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை தற்போது கிட்டத்தட்ட 59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையை நாம் அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்தியா அதிக வர்த்தகம் செய்வதற்கு ஏற்ப ரஷ்யா தனது சந்தையை இன்னும் அகலமாக திறக்க வேண்டும். அதிக வர்த்தகத்தில் ஈடுபடுவதும் அதற்காக நாம் அதிகமாகச் செய்வதும் நமது மந்திரமாக இருக்க வேண்டும். 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி விரைவாக முன்னேற வேண்டும்.

கட்டணங்கள், கட்டணமில்லா தடைகள், தளவாடங்களில் உள்ள தடைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம், சென்னை – விளாடிவோஸ்டாக் வழித்தடம் ஆகியவற்றின் இணைப்பை ஊக்குவிக்க வேண்டும். சுமுகமான கட்டண வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.