கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற, ஸ்ரீமுஷ்ணம் மாணவன் ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த மாணவனை மீட்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு வரும் பெற்றோருக்கு இது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் – பாமா. இத்தம்பதியின் மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். அங்கு கிஷோர் 3-வது ஆண்டு படித்தபோது, தன்னுடன் அறை எடுத்து தங்கியிருந்த மாணவர்கள் சிலருடன் சேர்ந்து பகுதி நேரமாக கூரியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.
கடந்த 2023-ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை அவர் டெலிவரி செய்ததாக ரஷ்ய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கிஷோருடன் மற்றொரு இந்திய மாணவர் நித்திஸ் மற்றும் ரஷ்ய மாணவர்கள் 3 பேரும் கைதாயினர். விசாரணைக்குப் பின் ரஷ்ய மாணவர்கள் 3 பேரை விடுவித்து விட்டனர். கிஷோரை மீட்க அவரது பெற்றோர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த நித்திஸும் மீட்கப்படவில்லை.
இந்தச் சூழலில் இரு மாதங்களுக்கு முன் ரஷ்ய போலீஸார் தன்னை ராணுவ தளத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பதாகவும், தன்னை உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்து கிஷோர் வீடியோ ஒன்றை அவரது பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து தனது மகனை மீட்க வேண்டும் என்று கடலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்காக ஆட்சியர் அலுவலகம் முன் சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இதற்கிடையே, துரை வைகோ எம்.பி இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சில தினங்களுக்கு நேரில் சந்தித்து, மாணவன் கிஷோர் மற்றும் இதுபோல் தவிக்கும் மற்றொரு இந்திய மாணவர் நித்திஸையும் ரஷ்யாவில் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில், ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் கிஷோரின் வீடியோ மற்றும் புகைப்படம் வேறு ஒருவரின் செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
“பொய்யான ஒரு வழக்கில் எங்கள் மகன் மாட்டித் தவிக்கிறான். எங்கள் மகனை மீட்க முடியாமல் தவிக்கிறோம். அவரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது” எனறு கிஷோரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் கிஷோர் ராணுவ உடையில் துப்பாக்கியு டன் இருக்கிறார்.