புதுடெல்லி: மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபடத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் வழக்கம்போல் கூடின. வழக்கம்போல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், மக்களவை முதலில் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும், பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது எவ்வித விவாதமும் இல்லாமல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் 21 நாட்கள் கூடியது. எனினும், மக்களவை வெறும் 37 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதேபோல், மாநிலங்களவை வெறும் 41 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.