பதவி பறிப்பு மசோதாவை கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித் ஷாவை நோக்கி அவர்கள் வீசி எறிந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாக்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும்.

இந்த கூட்டுக்குழுவை மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவையின் துணைத் தலைவரும் இணைந்து அமைப்பார்கள். இக்குழுவில், மக்களவையைச் சேர்ந்த எம்பிக்கள் 21 பேரும், மாநிலங்களவையைச் சேர்ந்த எம்பிக்கள் 10 பேரும் இடம்பெறுவார்கள். இவர்கள் தங்கள் அறிக்கையை அடுத்து வரும் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்: இந்த மசோதாவின்படி, ஓர் அமைச்சர் ஊழல் அல்லது கடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டாலோ, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ 31-வது நாள் முதல்வரின் பரிந்துரையின் பேரில், அவரை அமைச்சரவையில் இருந்து மாநில ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்றால், தானாகவே 31-ம் நாளில் அவர் பதவியை இழந்து விடுவார்.

இதேபோல, பிரதமர் அல்லது முதல்வர் தொடர்ந்து 30 நாட்களுக்கு சிறைக் காவலில் இருந்தால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என்று இருந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 31-வது நாளில் இருந்து அவர் முதல்வர் பதவியை இழப்பார். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரதமர், முதல்வர் அல்லது அமைச்சர்களை துணைநிலை ஆளுநர் பதவி நியமனம் செய்யும்போது, அதைத் தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த புதிய மசோதா பொருந்தும். இதன் மூலம் கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடும் குற்றங்கள் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.