விஜய் – இபிஎஸ்: `அடிமைக் கூட்டணி' ; `சிலர் கட்சி ஆரம்பித்ததும்…' – மாறி மாறி மறைமுக விமர்சனம்!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.

இம்மாநாட்டில், தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்த த.வெ.க தலைவர் விஜய், “மக்கள் சக்தி நம்மிடம் திரண்டு நிற்கும்போது அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதற்கு.

ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் அடிபணிந்துகொண்டு, இன்னொருபக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணியாக நம்ம கூட்டணி இருக்காது.

TVK மதுரை மாநாடு - விஜய்
TVK மதுரை மாநாடு – விஜய்

எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரையில் முதலமைச்சர் நாற்காலியை வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

ஆனால், அவர் ஆரம்பித்த அந்தக் கட்சியை இன்று கட்டிக்காப்பது யார்? இன்றைக்கு அந்த கட்சி எப்படி இருக்கிறது.

அப்பாவி தொண்டர்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்” என்று அ.தி.மு.க பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.

இதற்கிடையில், “எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்று எம்.ஜி.ஆர் பாடலையும் விஜய் பாடினார்.

இந்த நிலையில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று பேசியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யை நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் மக்களிடத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களெல்லாம் நம்முடைய தலைவர்களின் படங்களைப் போட்டுத்தான் தொடங்க முடியும்.

சில பேர் அ.தி.மு.க இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம் அறியாமையில் பேசுவதாக நான் பார்க்கின்றேன்.

இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கிறார் என்று அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இன்றைக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சில பேர் சில கருத்துக்களை தன் இஷ்டம் போல் பேசி வருகிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கி ஐந்தாண்டு காலம் தனது உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார். எடுத்த உடனே முதலமைச்சராகவில்லை.

பேரறிஞர் அண்ணா எடுத்த உடனேயே முதலமைச்சராகவில்லை. சில பேர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனையைச் செய்தது போல டயலாக் பேசுகிறார்கள்.

சில பேர் ஏதோ மக்கள் செல்வாக்கைப் பெற்றதுபோலவும், இந்த நாட்டுக்கு உழைத்தது போலவும், இனி அவர்கள் வந்துதான் நாட்டை காப்பாற்றுவதுபோலவும் அடுக்குமொழியில் பேசி வருகிறார்கள். யார் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இன்றைக்கு நான் பேசுகிறேன் என்றால் என்னுடைய அரசியல் வாழ்க்கை 51 ஆண்டுக்காலம்.

சில பேர் உழைப்பைக் கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள். அது நிலைக்காது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வை வீழ்த்துகின்ற ஒரே சக்தி அ.தி.மு.க. அ.தி.மு.க-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

நான் சாதாரண கிராமத்தில் பிறந்தவன். எனக்குப் பெரிய அடையாளம் எல்லாம் கிடையாது.

உழைப்பு, சேவை, விஸ்வாசம்தான் என் அடையாளம். மற்றவர்களைப் போல பல்வேறு திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் வருமானத்தைப் பெற்று ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் அரசியல் தொடங்கவில்லை.

சில பேர் எடுத்த உடனே எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மக்களுக்காக உழைத்தால் தான் நிலைத்து நிற்க முடியும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.