புதுடெல்லி: பெரும்பான்மை உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசியல் சாசன அமைப்பு மற்றொரு அரசியல் சாசன அதிகாரம் படைத்த அமைப்புக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் ராமசந்திர ராவ் வழக்கில் ஏற்கெனவே தெளிவுபடு்த்திஉள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றம் காலநிர்ணயம் செய்வதாக இருந்தாலும் அதை உத்தரவாக அல்லாமல் பரிந்துரையாக செய்திருக்க வேண்டும். சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் பல்வேறு அளவுகோல்கள், காரணங்கள், இடர்பாடுகள் உள்ளன. அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘அதற்காக தொடர்ந்து எந்த காரணமும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டால் அத்துடன் எல்லாம் முடிந்து விடுமா, அதற்கு தீர்வு காண வேண்டாமா’’ என்றனர். பதிலுக்கு துஷார் மேத்தா, ‘‘அரசியல் சாசன சட்டத்தில் இவ்வாறு எந்த காலநிர்ணயமும் செய்யப்படாத போது உச்ச நீதிமன்றம் அதில் குறுக்கிட்டு கால நிர்ணயம் செய்ய முடியாது. அது நாடாளுமன்றத்தி்ன் பணி. அரசியல் ரீதியிலான தீர்வு தான் சரியாக இருக்கும். நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உச்ச நீதிமன்றத்தில் தீர்வு கிடைத்துவிடாது. அத்தகைய பிரச்சினைகளுக்கு அரசியல் சாசன சட்ட ரீதியாகவே தீர்வு காண முடியும்’’ என்றார்.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘அந்த அரசியல் சாசன சட்டத்தின் தலைமைப் பாதுகாவலரே உச்ச நீதிமன்றம் தான். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் என அரசியல் சாசன பதவி வகிக்கும் ஒருவர் காரணமின்றி தனது கடமையை செய்ய மறுத்தால் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் கைகட்டிக்கொண்டு வேடிக்கைப்பார்க்க வேண்டும் எனக்கூற முடியுமா? நீதித்துறை அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லையா? தவறு நடந்தால் அதற்கு தீர்வு காண வேண்டாமா? காலவரையற்ற அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாகக் கூறினால் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு என்ன அதிகாரம் உள்ளது’’ என்றார்.
அதற்கு துஷார் மேத்தா, சட்டமியற்றும் பணியை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ள முடியாது. சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், நீதித்துறை என ஒவ்வொரு அமைப்புகளுக்கும் ஒவ்வொரு விதமான பணிகள் உள்ளன. இவையனைத்துமே அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்களே. குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் இப்படித்தான் செயலாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் இவர்களின்
அதிகாரங்களை நீதிமன்ற பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது. இதற்கு ஒரே தீர்வு அரசியல் சாசனத்தை திருத்துவதுதான். அதுவரை இந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தை திருத்த முடியாது, என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தை நீதிமன்றவிசாரணைக்கு உட்படுத்த முடியும். பெரும்பான்மை உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும். இந்த விஷயத்தில் தமிழகம் மட்டுமல்லாது வேறு சில மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளன’’ எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை வரும் ஆக.26-க்கு தள்ளி வைத்துள்ளனர்.