இந்தியாவின் சந்திரயான்கள்! | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன. நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது லேசுப்பட்ட காரியமும் அல்ல. வல்லரசு நாடுகள் மட்டும்தான் இதில் ஈடுபட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்தது.

முதல் விதை: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உலகின் பெரிய நாடுகள் உணர்ந்தி ருக்குமா என்பது தெரியாது. ஆனால், அதற்கான விதையை 2003இல் இட்டவர் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஆண்டு சுதந்திர தின உரையில் வாஜ்பாய் பேசும்போது, “நிலவை நோக்கிய இந்தியாவின் கனவுத் திட்டம் தொடங்கிவிட்டது; நிலவுக்கு விரைவில் விண்கலம் அனுப்பப்படும்” என்று சந்திரயான் திட்டம் குறித்த தகவல்களை வாஜ்பாய் வெளியிட்டார். 2004-2005இல் இத்திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது.

சந்திரயான் 1: சந்திரயான் 1 திட்டத்துக்காக ரூ.386 கோடி செலவிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைப் பைக் கொட்டினர். அதன் விளைவாக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், 2008 அக்டோபர் 22 அன்று ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் நிலவை 3,400 சுற்றுகள் சுற்றியது. நிலவில் சந்திரயான் 1 மொத்தமாக 312 நாட்கள் (2009 ஆகஸ்ட் 28 வரை) செயல்பாட்டில் இருந்தது.

இந்த விண்கலத்தின் மொத்த எடை 1,380 கிலோ. நிலவில் தண்ணீர் இருக் கிறதா என்பதை உலக நாடுகள் பெரிதாகக் கண்டறியாத நிலையில், சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்தது, மிகப்பெரிய சாதனை. சந்திரயான்-1 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றியது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை.

சந்திரயான் – 2: சந்திரயான்-1 விண்கலத்தின் தொடர்ச்சியாக சந்திரயான் 2 அனுப்பும் பணிகள் தொடங்கின. சந்திரயான் 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப் பட்டது. இத்திட்டத்துக்கு 2008 இலேயே ஒப்புதல் வழங்கப் பட்டபோதும் 2013 வரை ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக இத்திட்டம் மேலும் தாமதமானது. இறுதியாக 2018இல் சந்திரயான் 2 விண்கலம் ஏவத் திட்டமிடப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுகள் பலவற் றையும் தாண்டி 2019 ஜூலை 22 அன்று சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் கலன், மேற்பரப்பில் தரையிறங்கும் கலன், அதிலிருந்து வெளியேறும் உலாவி என மூன்று கலன்களை உள்ளடக்கியிருந்தது. நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவுவரை திட்டமிட்டபடி தரையிறங்கி வந்த லேண்டர் திடீரென பாதை மாறி அதன் வேகத்தையும் கட்டுப்பாட்டையும் இழந்தது. லேண்டர் செயலிழந்தாலும் ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து நிலவின் பல்வேறு ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியது. சந்திரயான்-2 திட்ட இயக்குநராகச் சென்னையைச் சேர்ந்த வனிதா முத்தையா பணியாற்றினார்.

சந்திரயான் 3: சந்திரயான் 2 தோல்வியில் முடிந்ததை அடுத்து, அவற்றில் நிகழ்ந்த தவறுகளைச் சரிசெய்து, அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான், இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திர யான்-3. இது 40 நாள் பயணத் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்துக்காக ரூ.615 கோடி செலவிடப்பட்டது. 2023 ஜூலை 14 அன்று விண்ணுக்குச் சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது.

இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்கிற பெருமையையும் சந்திரயான் 3 பெற்றது. அதை வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய முதல் நாடு இந்தியா என்கிற பெருமையும் கிடைத்தது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாகக் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. சந்திரயான்-3 திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றியது இன்னொரு சிறப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.